×

காலாண்டு, மிலாது நபி, காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தது

சென்னை: காலாண்டு, மிலாது நபி, சனி-ஞாயிறு, காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 28ம் தேதி மிலாது நபி விடுமுறை, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, சனி-ஞாயிறு வார விடுமுறை. இன்று திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், செப்டம்பர் 27ம் தேதி இரவே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

குறிப்பாக சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ரயில், பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பஸ், ரயில்களை விரும்பாத மக்கள் தங்களுடைய சொந்த கார்களில் பயணத்தை தொடர்ந்தனர். அவர்கள் தங்களது விடுமுறையை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று முதல் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனால், கடைசி நேரத்தில் அவர்கள் ஆம்னி பஸ்சை நம்பி உள்ளனர். அதிக அளவில் சென்னைக்கு மக்கள் திரும்ப உள்ளதால் ஆம்னி பஸ் கட்டணமும் 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, இன்று இரவு தென்மாவட்டங்கள் மற்றும் கோவையில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களிலும் இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கான வழக்கமான கட்டணம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.1,500 வரை வசூலிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இன்று இரவு நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ் கட்டணம் ரூ.4,620 ஆக உயர்ந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ரூ.4,700, மதுரை மாட்டுதாவணியில் இருந்து சென்னைக்கு ரூ.4,710 என்று கட்டணம் உயர்ந்துள்ளது. இதே போல கோவையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் கட்டணம் ரூ.4,510, திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.4,600 என்று பஸ்களில் உள்ள வசதிக்கு ஏற்றார் போல் இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், சொந்த ஊர் சென்று சென்னை திரும்ப உள்ள மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சில பேர் வேறு வழியில்லை என்பதால் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 8ம் தேதி வரை விடுமுறை உள்ளது. பஸ்களில் கட்டணம் உயர்வால் இவர்கள் தங்களுடைய திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். அவர்கள் இன்று இரவு ெசல்வதை தவிர்த்து மக்கள் கூட்டம் இல்லாத நாட்களில் தங்கள் பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காலாண்டு, மிலாது நபி, காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Miladu Nabi ,Gandhi Jayanti ,CHENNAI ,Qalandu ,Miladu ,Nabi ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...